சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள் | Sakalakalavalli Maalai Tamil Lyrics

Sakalakalavalli Maalai Tamil Lyrics

சகலகலாவல்லி மாலையை இயற்றிவர் குமரகுருபர சுவாமிகள் ஆவார். இந்தப் பாடல், இவர் கலைமகளை வேண்டி தமிழில் பாடிய பாமாலை ஆகும். இவர் ஒரு தடவை காசிக்கு சென்றார். அப்பொழுது தில்லை பாதுஷாவாக இருந்த முகமதிய மன்னனை வாதில் வெல்லக் கருதி அம்மன்னனது மொழியாகிய இந்துஸ்தானியை அறிந்து கொள்வதற்காக கலை மகள் அருள வேண்டும் என வேண்டி இந்தப் பாடலை பாடினார். இதில் பத்து பாடல்கள் உள்ளன. இவர் பக்தியை மெச்சிய அன்னை சரஸ்வதி இவருக்கு பன்மொழியாற்றலை வரமாக அளித்ததாக கூறப்படுகிறது. இவர் அம்மன்னரை காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடி வாதில் வென்றார்.

அழகிய தமிழ் மொழியில் பாடப்பட்ட சகலகலாவல்லி மாலை வெண்டாமரைக்… எனும் பாடலில் தொடங்கி மண்கண்ட வெண்குடை.. எனும் இறுதிப் பாடலில் முடிகிறது. இதில் பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. ஈழத்தில்  நவராத்த்ரி காலங்களில் ஒன்பது நாளும் சகலகலாவல்லி மாலை சைவ மக்களால் பாடப்பட்டு வருகின்றது.

இந்தப் பாடலைப் பாடி குமரகுருபரர் கலைமகளின் அருளைப் பெற்றதைப் போல, கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் அனைவரும் இந்த பாடலை பாடி சரஸ்வதி தேவியின் அருளைப் பெறலாம்.

சகல கலா வல்லி மாலை

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ?
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலாவல்லியே!

நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகல கலாவல்லியே!
 
அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!
 
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;
வட நூற்கடலும்,
தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும்,
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலாவல்லியே!
 
பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்;
சகல கலாவல்லியே!
 
பண்ணும், பரதமும், கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்;
எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும்,
கனலும், வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்;
சகல கலாவல்லியே!
 
பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே!
 
சொல்விற்பனமும், அவதானமும்,
கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
சகல கலாவல்லியே!
 
சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே!
 
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்;
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?
சகல கலாவல்லியே!