12 ராசிகளின் பெயர்கள் மற்றும் தன்மைகள்
மேஷம் :
காலச் சக்கரம் எனப்படும் ராசி சக்கரத்தின் பன்னிரண்டு ராசிகளுள் முதலாம் ராசி அல்லது முதல் வீடு மேஷம் ஆகும். இதன் அதிபதி செவ்வாய். இது சர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது அக்னி தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இதன் உருவம் ஆடு. இதன் நிறம் சிகப்பு. இந்த ராசி தமிழ் மாதத்தில் முதல் மாதமாகிய சித்திரையைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் அசுவினி பரணி மற்றும் கிருத்திகை ஒன்றாம் பாதம் ஆகும். இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் வழிபடலாம். செய்வாயின் பலத்தை அதிகரிக்க, சிவனை வணங்கினால் சிறந்த பலன் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசி, ராசிச் சக்கரத்தின் இரண்டாம் வீடு. இதன் அதிபதி சுக்கிரன். இது ஸ்திர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இதன் உருவம் காளை. இதன் நிறம் வெண்மை. இந்த ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமாகிய வைகாசியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் கிருத்தகை 2,3,4, பாதங்கள், ரோகினி 4 பாதங்கள், மிருகசீரிடம் 1, 2 பாதங்கள் ஆகும். இந்த ராசி அதிபதிக்குரிய தெய்வம் மகாலட்சுமி. எனவே, இந்த ராசிக்காரர்கள், சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும். மேலும் நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
Zodiac Signs Names In Tamil | 12 ராசிகள் பெயர்:
Tamil Name | English Name |
மேஷம் | Aries |
ரிஷபம் | Taurus |
மிதுனம் | Gemini |
கடகம் | Cancer |
சிம்மம் | Leo |
கன்னி | Virgo |
துலாம் | Libra |
விருச்சிகம் | Scorpio |
தனுசு | Saggitarius |
மகரம் | Capricorn |
கும்பம் | Aquarius |
மீனம் | Pisces |
மிதுனம்:
மிதுன ராசி, ராசிச் சக்கரத்தின் மூன்றாம் வீடு. இதன் அதிபதி புதன். இது உபய ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இது இரட்டைத் தன்மை கொண்ட ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் மூன்றாம் மாதமாகிய ஆனியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் மிருகசீரிடம்3,4 பாதங்கள் , திருவாதிரை 4 பாதங்கள் மற்றும் புனர்பூசம் 1,2,3 பாதங்கள். இவர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் வாழ்வில் எப்போதும் வெற்றி கிட்டும்.ராசி அதிபதி புதனுக்கு புதன்கிழமைகளில் பச்சை வஸ்திரம், சாத்தி, பச்சைப்பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
கடகம்:
கடக ராசி, ராசிச் சக்கரத்தின் நான்காம் வீடு. இதன் அதிபதி சந்திரன். இது சுக ஸ்தானம் எனப்படும். இது சர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இதன் உருவம் காளை. இதன் நிறம் வெண்மை. இந்த ராசி தமிழ் மாதத்தில் நான்காம் மாதமாகிய ஆடியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் புனர்பூசம் 4 ஆம் பாதம் பூசம் 4 பாதங்கள் , ஆயில்யம் 4 பாதங்கள். கடக ராசிக்காரர்கள் கௌரி அம்மனை வணங்கினால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். திங்கட்கிழமைகளில் அம்பிகைக்குக் குங்குமார்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.
சிம்மம்:
சிம்ம ராசி, ராசிச் சக்கரத்தின் ஐந்தாம் வீடு. இதன் அதிபதி சூரியன். இது ஸ்திர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஐந்தாம் மாதமாகிய ஆவணியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நடசத்திரங்கள் மகம் 4 பாதங்கள், பூரம் 4 பாதங்கள் மற்றும் உத்திரம் 1 ஆம் பாதம். இவர்கள் சூரியனை வழிபடுவது சிறப்பு. மேலும் சிவனை வழிபடுவதால் விசேஷ பலன்கள் உண்டாகும். அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் விசேஷம்
கன்னி:
கன்னி ராசி, ராசிச் சக்கரத்தின் ஆறாம் வீடு. இதன் அதிபதி புதன் இது உபய ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இது மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் இந்த ராசி தமிழ் மாதத்தில் ஆறாம் மாதமாகிய புரட்டாசியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நடசத்திரங்கள் உத்திரம்2,3,4 பாதங்கள் ஹஸ்தம் 4 பாதங்கள், சித்திரை1,2, பாதங்கள். புதனுக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு. கன்னி ராசியில் பிறந்தவர்கள், ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.
துலாம்:
துலாம் ராசி, ராசிச் சக்கரத்தின் ஏழாம் வீடு. இதன் அதிபதி சுக்கிரன். இது சர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இதன் உருவம் தராசு.
இந்த ராசி தமிழ் மாதத்தில் ஏழாம் மாதமாகிய ஐப்பசியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி 4 பாதங்கள், விசாகம் 1,2,3 பாதங்கள். இவர்கள் சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகும்.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசி, ராசிச் சக்கரத்தின் எட்டாம் வீடு. இதன் அதிபதி செவ்வாய். இது ஸ்திர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இது பல கால் ராசி ஆகும்.
இந்த ராசி தமிழ் மாதத்தில் எட்டாம் மாதமாகிய கார்த்திகையைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை4 பாதங்கள். பகவானை வழிபடுவதுடன், செவ்வாயின் பலத்தை அதிகரிக்க செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வரும் நாளில் சண்முகருக்குப் பாலாபிஷேகம் செய்து, பஞ்சாமிர்தம் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.
தனுசு:
தனுசு ராசி, ராசிச் சக்கரத்தின் ஒன்பதாம் வீடு. இதன் அதிபதி குரு. இது உபய ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி. இது ஆன்மீகத்தைக் குறிக்கும் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் ஒன்பதாம் மாதமாகிய மார்கழியைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் மூலம் 4 பாதங்கள், பூராடம் 4 பாதங்கள், உத்திராடம் 1பாதம். தனுசு ராசிக்காரர்கள் சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசி, ராசிச் சக்கரத்தின் பத்தாம் வீடு. இதன் அதிபதி சனி. இது சர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நிலத் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பத்தாம் மாதமாகிய தை மாதத்தைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4 பாதங்கள் அவிட்டம் 1,2, பாதங்கள். சனியின் பலத்தை அதிகரிக்க, மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.மேலும் சனிக்கிழமைகளில் மகா கணபதியை வழிபடுவது நல்லது.
கும்பம்:
கும்ப ராசி, ராசிச் சக்கரத்தின் பதினொன்றாம் வீடு. இதன் அதிபதி சனி. இது ஸ்திர ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது. ஆண் ராசி.
இந்த ராசி தமிழ் மாதத்தில் பதினொன்றாம் மாதமாகிய மாசி மாதத்தைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதங்கள் பூரட்டாதி 1,2,3 பாதங்கள். சனியின் பலத்தை அதிகரிக்க, கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் எதிலும் நன்மை கிட்டும்.மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வடை மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடலாம்.
மீனம்:
மீன ராசி, ராசிச் சக்கரத்தின் பன்னிரண்டாம் வீடு. இதன் அதிபதி குரு. இது உபய ராசி ஆகும். நான்கு தத்துவங்களுள் இது நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது. பெண் ராசி. இந்த ராசி தமிழ் மாதத்தில் பன்னிரண்டாம் மாதமாகிய பங்குனி மாதத்தைக் குறிக்கும். இந்த ராசியில் வரும் நட்சத்திரங்கள் பூரட்டாதி 4 ஆம் பாதம் உத்திரட்டாதி 4 பாதங்கள் ரேவதி 4 பாதங்கள். ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.