கார்த்திகை சோமவாரம்:

சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. திங்கள் என்றும் சந்திரனைக் கூறுவார்கள். எனவே தான் திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். திங்கள் அன்று சந்திரனின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும். அதாவது சந்திரனின் ஒளிக்கற்றைகள்  சக்தி மிகுந்ததாக ஆற்றல் மிக்கதாக இருக்கும். எனவே சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகின்றது. மேலும் சந்திரன் தோன்றியது கார்த்திகை மாதம் என்பதால் அந்த மாதம் வரும் திங்கட்கிழமைகள் சந்திரனுக்கு உகந்த நாளாகவும் விரதம் இருக்கும் நாளாகவும் போற்றப்பட்டு வருகின்றது.

தம்பதியர் ஒற்றுமை காக்கும் கார்த்திகை சோம வார விரதம்

தம்பதியர் ஒற்றுமை:

இருமனம் இணையும் திருமண பந்தம் சிறக்க, கணவன் மனைவி ஒற்றுமையே முதற் காரணமாக அமைக்கின்றது. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டும், அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும், விட்டுக் கொடுப்பதன் மூலம். கஷ்டமான நேரங்களில் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்வதும் இல்லற வாழ்க்கையை இனிதாக்கும்.  எங்கோ பிறந்த இரு ஜீவன்கள் இணையும் போது மனம் ஒன்றி வாழ இருவரும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இவையெல்லாம் நடமுறை வாழ்க்கையில் சில சமயங்களில் முரண்படுவது இயற்கையே. அதிலும் இது தற்காலத்தில் சிறிது கடினமாகவே உள்ளது.தம்பதியரின் ஒற்றுமைக்கு சோமவார விரதம் சிறந்த வழிகாட்டுதலாக அமைகின்றது.

புராணத்தில் கணவன் மனைவி ஒற்றுமை: 

உலகுக்கு ஒளி கொடுக்கும் சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தன்னுடைய  27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். ஆனால் சந்திரன், தனது 27 மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.

தனது பெண்களின் வருத்தத்தை  போக்க நினைத்த தட்சன், சந்திரனை அழைத்து, ‘உனது மனைவியர் அனைவரிடமும் நீ  அன்பாக இரு’ என்று கூறினார். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்து விட்டார்.

தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.

சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். எனவே தான் கார்த்திகை சோமவாரம் தம்பதியருக்கு மிகச் சிறந்த வாரமாக வழிபட வேண்டிய வாரமாக கருதப்ப்டுகின்றது.

தம்பதிகளுக்கு வரமாக அமையும் கார்த்திகை சோமவாரம்:

சிவபெருமானின் சடை முடியில் இடம் பெற்ற சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார். 

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்ற காரணத்தினாலும், . அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் அளித்து நல்வாழ்வு தந்தமைக்காக  அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்த காரணத்தாலும்  அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் தனிச் சிறப்பு பெறுகின்றன.

கார்த்திகை சோம வார வழிபாடு

கார்த்திகையில் வரும் எல்லா திங்கட்கிழமைகளிலும் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில்யாகமும் சந்திரசேகரர் பவனி விழாவும்  நடைபெறும்

கார்த்திகை சோம வார விரத பலன்கள்:

இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்.

அவர்கள் உறவில் நல்லிணக்கம் வளரும்.

அன்னியோன்யம் அதிகரிக்கும்.

முரண்பாடுகள் அகலும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள்.